வானம் இருண்டு
சில்லென்று மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது.
தெப்பம் அருகே அமர்ந்திருந்த செல்ட்டன்,
கடற்கரை மணலை அள்ளி காற்றின்
வேகத்தையும் திசையையும் அறிய முற்பட்டுக் கொண்டிருந்தான்
என எண்ணத் தோன்றினாலும், அவனது
எண்ணம் முழுவதும் படகேற்றி அனுப்பி வைத்த தன்னுடைய
மனைவி பற்றியும் ஒரு மாதக் குழந்தை
பற்றியுமே இருந்தது. "மண்டபம் முகாமில இந்தியாக்காரன்
தாரததான் தின்ன வேணும். உழைப்பும்
இல்ல ஒண்டும் இல்ல" என்று
இரண்டு மாசத்துக்கு முதல் திரும்பி வந்த
வளன் சொன்னது தன் மனைவியையும்
பிள்ளையையும் தனியே மனைவியின் பெற்றோரோடு
அனுப்ப செல்டனைத் தூண்டியது. "எத்தின நாளைக்குதான் இப்பிடி
மாறி மாறி இந்தியா இலங்கை
எண்டு ஓடித் திரியிறது. நமக்ண்டு
ஒண்டு இருந்தா அவங்களோட சந்தோசமா
இருக்கலாம். எண்பத்தந்சிலையே அங்க போயிருந்தா ஒரு
மாதிரி முகாம விட்டு வெளிய
போய் நிம்மதியா எங்கட சனக போல
உள்ளவங்களோட வாழ்த்திருக்கலாம்" எண்டு நினைத்துக் கொண்டான்.
என்னதான் இருந்தாலும் அவங்க நம்மட சனம்......நம்மள கைவிடாதுகள் எண்டு
அவனது வாய் முணுமுணுத்தது.
இருள் வானைக்
கவ்விக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு படகின் இரைச்சல்
சத்தம் கேட்டதும் ஆவலோடு எழுந்து நின்று
பார்த்தான்...படகு தூரத்தில் நின்று
விட, அவன் என்ன நினைத்தானோ
தெரியவில்லை கடலுக்குள் இறங்கி அப்படகை நோக்கி
போக முயன்றான். சற்று நேரத்தில் தெரிந்த
இரண்டு தலைகளையும் பார்த்ததும் அவனுக்கு மகிழ்ச்சி. வந்தது மாக்கசும் டிலானும்.
"அவங்களக் கண்டியா...கொண்டுவந்தியா....?" என்றவனின் ஏக்கம் புரிந்தவனாய், பொலிதீன்
பைக்குள்ளே சுத்தி வைத்திருந்த அந்த
கடிதத்தை அவனிடம் கொடுத்தான் மாக்கஸ்.
மனைவியின் எழுத்துக்களைப்
பாத்தது, அவளையே அவன் கண்முன்
நிறுத்தியது. மைப் பேனாவால் எழுதப்பட்ட
கடிதத்தின் சில எழுத்துக்கள் நனைந்து
ஊறிப்போய் காகிதத்தோடு படிந்திருந்தன. என் மனைவியின் கண்ணீர்தானோ
என்று ஏக்கத்தோடு அவன் படித்தான். ‘எனக்கு
உங்களை விட்டிட்டு இங்க இருக்க ஏலாது.
பிள்ளைக்கு ஒழுக்கான சாப்பாடும் இல்ல. வேண்ட காசும்
இல்ல. நீங்க இங்க வாங்க,
இல்லாட்டி அடுத்த போட்டில நான்
அங்க வந்திருவன்..செத்தா எங்கட ஊரிலேயே
செத்திருவம்.. சொந்தக்காரங்க நம்மட கல்லறையையாச்சும் பாக்கட்டும்.
கட்டாயம் வாங்க’ என்ற மனைவியின்
வரிகள் அவனை கண்கலங்க வைத்தன.
எதோ சிந்தனையில்
ஆழ்த்திருந்தவன், சட்டென நாய் குரைக்கும் சத்தம்
கேட்டதும் நினைவு திரும்பியவனாய், "ஆமியாதான் இருக்கும்" என்று நினைத்துக்கொண்டான். எழுந்து
விறுவிறுவென கோயில் பக்கம் போனான்.
இருள் சூழ்ந்து விட்டதினால், கோயிலில் தங்களது இரவினை பாதுகாப்பாகக்
கழிக்க வரும் குடும்பங்கள் வந்துகொண்டிருந்தன.
இக்குடும்பத்திற்கு இவ்விடம் என்பது எழுதப்படாத வழக்காக்கி
விட்டிருந்தது.
பசி யாரைத்தான்
விட்டது. கோயிலில் தங்க வந்த குடும்பங்கள்
கோயில் முன்றலிலும் விறாந்தையிலிம் தங்களது சாப்பாட்டுப் பொட்டலங்களை
விரித்து சிறுவர்களுக்கு முதலில் பரிமாறத் தொடக்கி
விட்டிருந்தார்கள். ஆலயத்தின் புனிதம் என்பது தங்கள்
மனதினுள் எப்போதும் இருக்கிறது என்பதுபோன்றிருந்தது அவர்களது செயல். அதுவும் ஒருவகையில்
உண்மைதான். ஏனென்றால் வெற்றி மாதா என்றால்
அவர்களுக்கு அளவு கடந்த நம்பிக்கை.
ஆலயத்தில் வந்து தங்குவதற்கு அது
மிக முக்கிய காரணம். பங்குச்
சுவாமியும் ஆலயத்தைச் சுற்றி ரோந்து வரத்
தொடங்கிவிட்டார். "கூளத்த கோயிலுக்குள போடாம
வெளியில கொண்டுபோய்ப் போடுங்க.. நாளைக்கு காலம ஒரு பூசைதான்..
பூசை முடிஞ்சு எல்லாரும் வீட்ட போனாப் போதும்"
தனக்குரிய தொனியிலேயே சொன்னார் பங்குச் சுவாமி.
குடும்பங்கள் கூட்டாக
அமர்ந்து வெளியிலே உணவருந்திக் கொண்டது செல்ட்டனுக்கு மனைவியுடன்
நிலாச்சோறு சாப்பிட்டதை ஞாபகப்படுத்தியது. மின்சாரம் இல்லாதது ஒருவகையில் மனிதன் இயற்கையை ரசிக்க
உதவியது என்பதை அவன் நினைக்கக்
கூடிய நிலையில் இருக்கவில்லை. வியாபாரி கருவாட்டு காசை இன்னும் அனுப்பவில்லை.
கையில் பணமும் இல்லை. இருப்பினும்
நபிக்கையோடு நவம் அண்ணனின் கடையை
நோக்கி நடந்தான். காஸ் லைட் வெளிச்சத்தில்
பல அரசியல் ஞானிகள் அழுக்கு
சாரத்துடன் வாங்கில் இருந்துகொண்டு அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள். கடைசியில் அவர்கள்
பேசும் அரசியல் தான் நடக்கப்
போகிறது என்பது அன்று அவர்களுக்குப்
புரிந்திருக்க வாய்ப்பில்லை. "ஐயா ரெண்டு ரொட்டியும்
மீன் குழம்பு மட்டும் தாங்க"
என்றவனை நவம் அண்ணன் பார்த்த
பார்வை, கடனுக்கு சாப்பிட்ட அந்த ஐம்பதை தந்திட்டு
சாப்பிடு என்பது போலிருந்தது. "தம்பி
முதல்ல காசு தந்தவங்களுக்கு ரொட்டிய
குடு" என்ற நவம் அண்ணனின்
வார்த்தை, கடன் சொல்லி சாபிடுபவர்களின்
நிலையை தேசிய வானொலியில் சொல்லியது
போலிருந்தது.
"தம்பி ஒரு பிலெண்டீ
போடுப்பா" என்று சொல்லிக் கொண்டே
தனது பையிலிருந்த துண்டு பீடியை மூலையில்
தொங்கிக் கொண்டிருந்த எரியும் கம்பான் கயிற்றில்
பற்ற வைத்துக் கொண்டான்.
கறைபடிந்த அந்த கண்ணாடிக் குவளையில்
சூடான பிலேயிண்டீயும், பீடியும்தான் அவனது இன்றைய இரவு
சாப்பாடு. அப்படியே கோயில் முகப்பில் வந்து
நீட்டி நிமிர்ந்து கொண்டே அந்த அரைவட்ட
நில்லாவைப் பார்த்தான். ஒரு அழகிய பெண்ணின்
முகம். அது என்ன மனைவியா
மகளா..? அவனுக்குள்ளே ஒரு சந்தேகம்...
நிலவில் தெரியும்
அந்த முகங்களை ரசிக்கக் கூடிய நிலையில் அவனது
மனம் இல்லை என்பது அவனுக்கு
மட்டுமல்ல, தங்கள் உறவுகளைப் பிரிந்திருக்கும்
ஒவ்வொருவருக்கும் தெரியும். அது யாருடைய முகம்
என்ற குழப்பத்திலேயே மேலே பார்த்துக்கொண்டிருந்தவன், ஆலய மணியின்
சத்தம் கேட்டு விழித்தான். தமிழ்
மக்களின் விடையிலாக் கேள்விகள் போல, நிலவில் தெரிந்த
அந்த முகத்தை அடையாளம் காணாமலே
தூங்கிவிட்டேனே என மனதுக்குள் நினைத்துக்
கொண்டான். "திருந்தாதி அடிச்சாச்சு...பல்ல மட்டும் தீட்டிட்டு
பூசயப் பாப்பம்" என்னச் சொல்லிக் கொண்டே
கோயில் கிணற்றுப் பக்கம் போய் வேப்பம்
குச்சியால் பல்துலக்கி, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக்
கொண்டு திருப்பலியில்
கலந்துகொண்டான்.
சுவாமி சொல்லும்
பிரசங்கம் அவனது மண்டையில் ஏறவில்லை.
ஏனெனில் ஒவ்வொரு நிமிடமும் எப்பிடியாவது
மனைவி பிள்ளையோடு போய்ச் சேந்திரவேணும் என்ற
எண்ணம் மட்டுமே அவனது மனதில்
மேலோங்கி விட்டிருந்தது. இப்படியே மாதங்கள் இரண்டு ஆகிவிட..எப்படியாவது
சேத்த கொஞ்சக் காசாகக் கொண்டாவது
மண்டபத்துக்குப் போய் மனிசியையும் பிள்ளையும்
மீண்டும் ஊருக்கு கூட்டிக்கொண்டு வந்துவிடவேணும்
என்று முடிவெடுத்தான். அங்கிருந்து வருவோரெல்லாம், முகாமில இருக்கிறதவிட எங்கட
ஊரிலேயே செத்திரலாம் எண்டு சொல்வதை கேட்டுக்
கேட்டு, அதே முடிவை எடுக்க
மனம் அவனை வற்புறுத்தியது. சிலோன்
சோப்புக்கும், சாராயத்துக்கும், பிஸ்கட் பவுனுக்கும் அங்க
நல்ல மதிப்பு என்று வருவோரெல்லாம்
சொல்ல கேள்விப் பட்டிருக்கிறான். சிலர் சிலோன் சோப்பினை
ராமேஸ்வரத்தில் கொண்டுபோய் விற்பதையே தொழிலாகச் செய்து வந்தனர் என்பது அவனுக்குத் தெரியும்.
இருந்த பணத்தை
எல்லாம் திரட்டி ஓரிரு போத்தல்
சிலோன் சாராயத்தையும், முடிந்தளவு வாசனை சோப்பினையும்
கட்டிக் கொண்டான். எல்லாவற்றையும் உப்பு தண்ணி படாதவாறு
பொலித்தீன் பைகளால் கட்டிக் கொண்டு
தனது பயணத்திற்கு தயாரானான். மீன்பிடி தொழிலாளி போல் உடுத்திக் கொண்டு,
இரவு வரும்வரை கடற்கரையில் காத்திருந்து படகேறி பயணத்தைத் தொடங்கினான்.
செல்டன், சேகர், நிமலன்
ஆகிய மூவரும் ஒரு கண்ணாடி
இழைப் படகில் தனுஸ்கோடி நோக்கி
புறப்பட்டனர். இயந்திர சத்தம் யாரையும்
விழிப்படையச்செய்து விடக்கூடாது என்பதனால் சிறிது தூரத்துக்கு வலைகளை
வைக்க பயன்படுத்தப்படும் தரப்பால்களைப் பயன்படுத்தி பாய்மரங்களை அமைத்து படகைச் செலுத்தினர்.
வழமையாக இப்படியான தொழில்களைச் செய்வோர், இந்தியன் இழுவைப் படகுகளைக் கண்ட
பிறகுதான் தங்களின் படகுகளின் இயந்திரங்களைச் இயக்குவர். கடலில்
அடிக்கடி நிகழும் சண்டைகளால், சம்பந்தப்பட்ட
யாரும் அதிக கடல் ரோந்தினைச்
செய்வதில்லை. அது, அந்நாட்டு மீனவர்களுக்கு
பொருட்களைக் கடத்தவும், நம்நாட்டு ஆயுதம் தாங்கியோர் தங்களுக்கு
தேவையானவற்றை பெற்றுக்கொள்ள பெரிதும் உதவியது.
அன்று காற்று
சற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது.
கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. வேறு வழியில்லை, தொடங்கிய
பயணத்தை நிறுத்தவும் ஏலாது. போவோம் என்ற
முடிவுடன் அவர்கள் இருந்தார்கள். படகு
மெதுவாக காற்றில் நகர்ந்து கொண்டிருக்க, மெலிதான நிலவு வெளிச்சத்தில்
நட்சத்திரங்களை திசைகாட்டியாக வைத்து அவர்களின் பயணம்
தொடர்ந்தது.
"இவ்வளவு நேரமாகியும் இந்தியா
ற்றோளர காணயில்ல" என்றான் நிமலன்.
எதோ பிரச்சனை நடக்கப் போவதாக நிமலனின்
மனம் உறுத்தியது. "சேகர் அண்ண, மெதுவா
ஓடுவமா" எண்டு கேட்க, சற்று
யோசித்த சேகர், பின்னர் ஆமாம்
என்று தலையசைத்தான். மெதுவாக இயந்திரத்தை இயக்கிய
நிமலன், வேகத்தைக் கூட்ட இயந்திரத்தின் சத்தமும்
கூடியது. திடீரென்று பல வெளிச்சங்கள் தங்களைச்
சுற்றி ஒளிரத் தொடங்குவதை அவதானித்த
நிமலன், படகின் வேகத்தை மேலும்
அதிகரித்தான். இவை சேகருக்கும், நிமலனுக்கும்
புதிதில்லை என்றாலும் செல்டனுக்கு பயம் தொற்றிக்கொண்டது. நிலாவில்
தெரியாத அவன் மனைவி பிள்ளையின்
முகம் அவன் நினைவில் அடிக்கடி
வந்துபோனது. "வெற்றி மாதாவே, எப்பிடியாவது
என்ன கொண்டுபோய் சேத்திரு" என்று மனதுக்குள் மன்றாடிக்
கொண்டான். தூரத்தில் தெரிந்த வெளிச்சமும் படகொலியும்
தங்களை அண்மிப்பதை உணர்ந்த சேகரும் நிமலனும்
சுதாகரித்துக் கொண்டவர்களாய் கடலில் குதிக்க தயாரானார்கள்.
செல்டனுக்கு அவ்வளவாக
நீச்சல் தெரியாது என்பதால் செய்வதறியாது திகைத்து நின்றான். வருவது யார், அவர்களா..இவர்களா..? ஏதாவது பேசி சமாளிப்போம்
என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, சன்னங்கள் அவர்களை
நோக்கிப் பாயத் தொடக்கி விட்டிருந்தன.
சீறிவரும் சன்னகளில் இருந்து தப்பிக்க மூவரும்
கடலில் குதித்தனர். செல்டனுக்கு யோசிக்க நேரம் இருக்கவில்லை.
“மாதாவே, என்ற மனிசியையும் மகளையும்
நீதான் காப்பாத்த வேணும்” என்று முழுப்
பாரத்தையும் கடவுள் மேல் போட்ட
அதீத திருப்தியுடன் செல்ட்டன் நீந்தத் தொடங்கினான். அவர்கள்
குதித்து கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்குள் படகு
சல்லடயாகி மூழ்கத் தொடங்கியது. அலையின்
வேகம், இருட்டு, குளிர் காற்று மூன்றும்
இவர்களைத் தாக்க...பின்னர் இவர்களுக்குள்
என்ன நடந்தது என்று எனக்கும்
தெரியவில்லை..
மறுநாள் காலை
மீன் பிடிக்க புறப்பட்ட அவ்வூர்
மீனவர்கள், "கடல் கொந்தளிக்கிறதப் பாத்தா
எதோ கடலில பிணம் கிடக்கிறமாதிரி
இருக்கு.. கரைக்கு தள்ளிட்டுது எண்டால்
கடல் அமைதியாயிரும்" என்று சொல்லிக் கொண்டார்கள்.
மறுபுறம், மண்டபம் முகாமில் இருந்த
செல்டனின் மனைவி, குழந்தைக்கு பால்
கொடுத்துக் கொண்டே, செல்டனுக்கு கடிதமெழுத
ஆயத்தமானாள்....யுத்தத்தின் முடிவில் அவளும் ஒரு விதவைத்
தாய்தான் என்பது அவளுக்கு அப்போது
தெரிந்திருக்க வாய்பில்லை.